தங்கமணி 
TNadu

மின் தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிமுக ஆட்சியை குறை கூறுவதா? : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றபோது தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம். இது மத்திய அரசின் அறிவிப்பிலும் இடம்பெற்றது. தமிழகம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம்.

தமிழகத்தில் மே மாதம் 2-ம் தேதி வரை மின்சார விநியோகம் சீராக நடைபெற்று வந்தது. அப்போது தமிழகத்தின் உச்சபட்ச மின்சாரத் தேவை 17,121 மெகா வாட் ஆக இருந்தது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 3,300 மெகாவாட் பெறப்பட்டதுபோக, மீதி மின்சாரத்தை தமிழகத்திலேயே உற்பத்தி செய்தோம். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மின்சாரத் தேவை குறைந்து சுமார் 14 ஆயிரத்து 500 மெகாவாட் மட்டுமே மின்தேவை உள்ளது. காற்றாலை மூலம் 3 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

தமிழகத்தில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு திறன் உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு பதவியேற்று 10 நாட்களில் மின்சார விநியோகத்தை சீரமைப்போம் என்று கூறினர். ஆனால், ஒரு மாதத்தை கடந்த நிலையில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காமல், மின் தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதிமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை, அதனால்தான் மின்தடை ஏற்படுகிறது என காரணம் கண்டுபிடித்து, தவறான தகவலை தெரிவிக்கிறார்.

மின் கட்டணம்

மே மாதம் கோடைக் காலம் என்பதால் பலருக்கும் அதிகப்படியான கட்டணம் வந்திருக்கும். அந்த தொகையை தற்போது செலுத்தச் சொல்வதால், கூடுதலான கட்டணத்தை செலுத்த முடியாமல் பலரும் தினசரி மின்வாரிய அலுவலகங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT