Regional01

ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூல் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு விதிமுறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிமுறையை பின்பற்றாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுவோரை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 232 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 394 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் 348 இருசக்கர வாகனங்களும், 146 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதுபோல் மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி செயல்பட்ட இரு கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT