“போலி ரசீது மூலம் வரிஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட வணிகர்களு டனான கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம், அமைச்சர் கூறியதாவது:
கடந்த 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போது வணிகர்களை நேரடியாக அழைத்து, ஜிஎஸ்டி தொடர்பாக கருத்துகள் கேட்டு வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.15 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது.
போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 2015-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இடைத்தரகர் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில், யார் பத்திரம் பதிகிறார்களோ அவர்களது பதிவு நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆன்லைன்மூலம் பெறப்பட்டு, டோக்கன் வழங்கும் புதிய நடைமுறை 10 தினங்களுக்குள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், த.மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள், வணிகவரித்துறை முதன்மை ஆணையர் எம்.ஏ.சித்திக், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது 2015-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.