முஸ்லிம்களின் அடக்க ஸ்தலத்துக்கான நிலப் பத்திரத்தை, முஸ்லிம் சமுதாய நிர்வாகிகளிடம் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ் நேற்று வழங்கினார்.
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலம் (கபர்ஸ்தான்) அமைத்து கொடுக்க வேண்டுமென, திருப்பூர்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் -காங்கயம் சாலை நாச்சிபாளையத்தை அடுத்த வண்ணாந்துறைபுதூர் பகுதியில் அடக்கஸ்தலத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை செப்பனிட்டு, ஆழ்குழாய் கிணறு, சுற்றுச்சுவர் மற்றும் முன்புற பூங்கா உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த இடத்துக்கானநிலப் பத்திரம் ஒப்படைக்கும் நிகழ்வு, பெரிய பள்ளிவாசலில்நேற்று நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், பெரிய பள்ளிவாசல் மற்றும் நாச்சிபாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் பத்திரத்தை ஒப்படைத்தார். பெரிய பள்ளிவாசல் தலைவர் ஷாஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.