மருத்துவமனைகள், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்கவும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் உடனே இயற்ற வலியுறுத்தியும் நேற்று (18-ம் தேதி) சேலம் ஐஎம்ஏ வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரகாசம் தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் வள்ளிநாயகம், பாலமுருகன், ராஜேஷ், ரங்கநாதன், மணிவண்ணன் உள்பட மருத்துவமனை பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர். மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரகாசம் கூறியதாவது:
மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடப்பது முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு உடனே மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும். இனி தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.