இந்தியா முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறன்வழி வருவாய் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு 12 ஆயிரம் என்ற அடிப்படையில், 4 ஆண்டுகளுக்கு ரூ.48,000 வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் தேர்வுத்துறையால் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடந்த இத்தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 6,348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 338 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் அருகே துத்திகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவி லலிதா, மாணவர் முருகேசன், மாணவிகள் சித்ராதேவி, சரோ பிரதீபா, மாணவர் கமலேஷ் பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி அருள்ராஜ், வட்டார கல்வி அலுவலர் கவிதா, தலைமை யாசிரியர் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோல செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய திறனாய்வு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மூலம் பயிற்சி பெற்ற 50 பேரில், செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பள்ளி மாணவிகள் முகிலாதேவி, கவிதா, செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் பள்ளி மாணவி புவனேஸ்வரி, ராமசாமி பிள்ளை பள்ளி மாணவர்கள் சரத் பாலாஜி, முகமது சிமர், புளியரை அரசு பள்ளி மாணவிகள் சரண்யா, ஷர்மிளா ஆகியோர் வெற்றிபெற்றனர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த இலத்தூர் ஆசிரியர் அமுதா, தென்காசி ஆகாஷ் அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், செங்கோட்டை வட்டார கல்வி அலுவலர் மேரி கிரேஸ் ஜெபராணி வாழ்த்து தெரிவித்தனர்.