திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் செயல்படுத்த, 2,343 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.18.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன வசதிகள் செய்துதரப்படுகிறது. நுண்ணீர் பாசனத்துக்கான பிரதான குழாய்களை நிலத்தில் குழி எடுத்து பதிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நுண்ணீர் பாசனத் திட்டத்துடன் இணைந்து துணை நீர் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தின் இலக்காக 2,217 ஹெக்டேர் நிர்ணயிக்கப் பட்டு, ரூ.3.74 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு புதிதாக டீசல் மற்றும் மின் மோட்டார் வாங்க அதிகபட்சமாக ரூ.15 ஆயிரமும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைப்பதற்காக ரூ.10 ஆயிரம், தரை மட்டத்தில் தொட்டி கட்டுவதற்கு ஒரு கன மீட்டருக்கு ரூ.350 அதிகபட்சமாக ரூ.40 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.