திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்னீர்பள்ளம் முல்லை நகரைச் சேர்ந்த மாணவர் பாலமுகேஷ் (19) என்பவர், கடந்த 2 நாட்களுக்குமுன் அரிவாளால் வெட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ, வேன் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவரை அரிவா ளால் வெட்டியது தொடர்பாக கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அருண்பாண்டி (19), இசக்கிபாண்டி (20) உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருண்பாண்டி, இசக்கிபாண்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் முல்லை நகரைச் சேர்ந்த கணேசன்(39), செந்தில்குமார் (28), ராயப்பன் (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னீர்பள்ளம், முல்லைநகர், மருதம் நகர் பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.