சேலம் ஒமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், ‘சாதிய உணர்வை தூண்டி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவை கண்டித்து’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் மாவட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற கூட்டம் ஓமலூரில் நடந்தது. கூட்டத்துக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: சட்டப்பேரவை தேர்தலின்போது, “அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக” ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கமாக செய்தி வெளியிட்ட சசிகலா, தேர்தல் முடிவுக்குப் பின்னர் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக் கொள்ள, அதிமுக-வை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி, விநோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
அவர், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லை. தொலைபேசியில் சசிகலா பேசும்போது, சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில், உண்மையான காரணத்தை தமிழக அரசு குறிப்பிட வேண்டும்.
கரோனா காலத்தில் கட்டுமானப் பொருட்கள் தேவை குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, விலை உயர்வைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், எம்எல்ஏக்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.