Regional02

தமிழகத்துக்கு தனி ஏற்றுமதி கொள்கை : தொழில் துறை அமைச்சரிடம் ஏஇபிசி கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டுக்கென தனி ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட வேண்டுமென, ஆயத்த ஆடை மேம்பாட்டுக்கழக (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை, சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் துறைகளுக்கும் சாதகமான ஆதரவை தமிழக அரசு வழங்கும் என்று அவர்தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு தனி ஏற்றுமதிக்கொள்கையை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு, முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அரசு விரைவில் ஏற்றுமதிகொள்கையை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

திருப்பூர் போன்ற தொழில்துறை பகுதிகளில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மற்றும் விடுதி வசதி ஏற்படுத்துவது, இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரைவில் செயல்படுத்துவது, கோவை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவது மற்றும் திருப்பூர் வரை விரிவாக்கம் செய்வது, தமிழ்நாட்டிலுள்ள துறைமுகங்களின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்மூலமாக 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி இரட்டிப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT