கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் நுண்நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது, கரோனா பரவல் காலக்கட்டத்தில் நிதி சேவை அளிப்போர் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவீதம் பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை இந்த நிறுவனத்தில் சுமார் 300 பேர் வரையில் கூடியுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கர், சக்திவேல் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில்,கரோனா விதிகளை மீறி அதிகமான அளவிற்கு நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை கூடச் செய்ததும், சுமார் 50 பணியாளர்கள் பணியில் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, விதியை மீறியதாகக் கூறி அங்கிருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். பின்னர், அந்த நிதி நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.