பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் இம்மாத தொடக்கத் தில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழைப்பொழிவு உள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் மற்றும் பில்லூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 3 மணிக்கு 97 அடியை எட்டியதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானிசாகர் அணை வரையிலான பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீருடன், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைநீரும் சேர்ந்ததால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து கடந்த 16-ம் தேதி விநாடிக்கு 1000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று பகல் 12 மணிக்கு விநாடிக்கு 13 ஆயிரத்து 501 கனஅடியாக அதிகரித்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்காக 200 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.