Regional02

கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்துடன் - தாமிரபரணி பாசன பகுதிகளை இணைக்க விவசாயிகள் எதிர்ப்பு :

செய்திப்பிரிவு

தாமிரபரணி வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரித்து தூத்துக்குடி மாவட்ட பாசனப் பகுதிகளை கோரம்பள்ளம் வடிநில கோட்டத்துடன் இணைக்கும் முடிவுக்கு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் தலைமடை மாவட்டமான திருநெல்வேலியில் 40 ஆயிரம் ஏக்கர், கடைமடை மாவட்டமான தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என மொத்தம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.

பொதுப்பணித்துறை நீர்வளஆதார அமைப்பின் தாமிரபரணி வடிநிலக் கோட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இருமாவட்டங்களுக்கும் பொதுவாக செயல்பட்டு வருகிறது.

இந்த கோட்டத்தின் கீழ் 2 மாவட்டங்களிலும் 8 அணைகள், 11 கால்வாய்கள், 186 முறைப்படுத்தப்பட்ட குளங்கள் உள்ளன. இவைஅனைத்தும் ஒரே செயற்பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. தாமிரபரணி வடிநில கோட்ட அலுவலகம் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனி செயற்பொறியாளர் நியமிக்க வேண்டும். வைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு தனியாக வடிநிலகோட்டம் அமைக்க வேண்டும் என விவசாயிகளில் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து தாமிரபரணி வடிநில கோட்டத்தை இரண்டாக பிரித்து, தூத்துக்குடி மாவட்ட பாசனபகுதிகளை கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முடிவுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பொருநை நதிநீர் மேலாண்மை சங்கத் தலைவர் கண்ணன் கூறியதாவது:

தாமிரபரணி வடிநில கோட்டத்தை பிரிப்பது எந்த விதத்திலும் நீர் பங்கீட்டுக்கும், சிறந்த நீர் மேலாண்மைக்கும் ஏற்றதாக இருக்காது. இதனால் இரு மாவட்டவிவசாயிகளிடையே உள்ள ஒற்றுமைக்கு பேராபத்து எற்படுவதுடன், அதிகாரிகளிடையே நிர்வாக குளறுபடியும் உருவாகும். கடைமடை பகுதியான தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலன்களும், பாரம்பரிய உரிமைகளும் பாதிப்படையும்.

கோரம்பள்ளம் வடிநில கோட்டத்துடன் தாமிரபரணி பாசன பகுதிகளை இணைத்தால் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். அப்படியே தாமிரபரணி வடிநில கோட்டத்தை 2-ஆக பிரிக்கவேண்டுமானால் வைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டுதனியாக வடிநில கோட்டம் அமைக்க வேண்டும். இல்லையெனில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தின் கீழுள்ள 53 பாசனக் குளங்களை சேர்ந்த 95 கிராம விவசாயிகளின் கருத்து கேட்டு, அதன்படி முடிவு செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT