Regional01

கிராப்பட்டியில் நுண் உரம் செயலாக்க மையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சி கிராப்பட்டியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் மற்றும் நுண் உரம் செயலாக்க மையம் ஆகியவற்றை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.

கிராப்பட்டியில் உள்ள மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் அலுவலகம் அருகில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், மாநகராட்சி பொது நிதியில் ரூ.55.70 லட்சத்தில் மாநகராட்சியின் 34-வது நுண் உரம் செயலாக்க மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப் பூசி முகாமைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், எம்.பழனியாண்டி, பி.அப்துல் சமது, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.தனலட்சுமி, நகர முதன்மைப் பொறியாளர்எஸ்.அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேலரண்சாலை பகுதியில் ரூ.19.70 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு கார் நிறுத்தம், புத்தூர் மார்க்கெட்டில் ரூ.20.20 கோடியில் 3 தளங்களாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், தில்லைநகர் 7-வது குறுக்குச் சாலையில் ரூ.15 கோடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 3 தளங்களாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், மரக்கடை பகுதியில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பையை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தி, குப்பைக் கிடங்கைச் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT