கரூரில் நேற்று ரேஷன் கடையில் ஆய்வு செய்ய சென்ற ஆட்சியர் த.பிரபு சங்கர், அங்கு பொருட்கள் விநியோகிக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்ட பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள ரேஷன் கடையில் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் காலை 9.36-க்கு ஆய்வுக்கு வந்த நிலையில், அதுவரை பொருட்கள் விநியோகிக்கப்படாமல் ரேஷன் கார்டுதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டிருந்தனர். இதைக் கண்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், பொருட்கள் விநியோகம் செய்யாமலிருப்பது குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். பின்னர், தான் ஆய்வுக்கு வந்ததால் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை வீடுகளுக்கு வந்து விநியோகம் செய்யாதது, மளிகைத் தொகுப்புகளில் சில பொருட்களின் எடை குறைவாக இருப்பது உள்ளிட்ட புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தவறுகள் களையப்படும். தவறுகள் செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் முட்டைகள் வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார். அப்போது, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.