திருநெல்வேலியில் நடைபெற்ற 4 மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். அருகில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ். 
Regional01

குழுக் கடன்கள் மட்டுமல்லாமல் - தனி விவசாயிகளுக்கும் கடன் வழங்க அறிவுறுத்தல் : நெல்லையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

குழுக் கடன்கள் மட்டுமல்லாமல், தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை சார்பில் திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை யில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், 4 மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்பு அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி யுள்ளனர். அவர்களுக்கு பயிர்க்கடன் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, அவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பில் உள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக 99 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கருப்பு, பழுப்புநிற மற்றும் சேதமடைந்த அரிசியை வழங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குழுக் கடன்கள் மட்டுமல்லாமல், தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றவும், புதிதாக ரேஷன் அட்டைகளை வழங்கவும் உணவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT