திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வாழையிலிருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 5,500 ஏக்கர் பரப்பளவில் 50 லட்சத்துக்கு மேல் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் உள்ளூர் சந்தைகளுக்கும், கேரளத்துக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
களக்காடு வட்டாரத்தில் 950 வாழை விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டுவரும், `வாகீஸ்வரர் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவன’த்தில் வாழைக்காய்கள் மற்றும் தண்டுகளில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைக்காயில் இருந்து சிப்ஸ், வாழைக்காய்ப் பொடி, வாழைத்தண்டு பொடி, வாழை நாரில் இருந்து கைவினைப் பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருமானம் பற்றிய தகவல்களை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரப்பாண்டியன், துணை இயக்குநர் முருகானந்தம், தோட்டக்கலை உதவி இயக்குநர் திலிப் ஆகியோர் விளக்கினர். களக்காடு வட்டாரத்தில் வாழைச்சந்தை, வாழை ஏல மையம் மற்றும் இயந்திரங்கள் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று, விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
`வாழையிலிருந்து சிப்ஸ், வாழை நார் மற்றும் பிற மதிப்பு கூட்டுப் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கு, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று, ஆட்சியர் தெரிவித்தார். வேளாண்மை அலுவலர்கள் ஆனந்த்குமார், வானமாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.