அரசின் காப்பீடு திட்டம் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுவதை உறுதி செய்து, தகுதியானவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தேனி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி நியமிக்கப்பட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்ட எச். கிருஷ்ணன் உண்ணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட இருக்கிறேன். அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சரியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தடுப்பூசி அல்லது கரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள் தொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் வழிகாட்டுதலின படி ஈரோடு மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு காப்பீடு திட்ட பலன்கள் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் காப்பீடு திட்டம் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுவதை உறுதி செய்து, தகுதியானவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற கிருஷ்ணன் உண்ணி, ஏற்கெனவே, 2014-ம் ஆண்டு கோபியில் துணை ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேனி ஆட்சியராக பொறுப்பேற்ற நிலையில், தற்போதைய பணி மாறுதல் காரணமாக ஈரோட்டில் 34-வது ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.