Regional02

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று - கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் தடுப்பூசி மையம் :

செய்திப்பிரிவு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. நேற்று முதல் இங்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தடுப்பூசி போடும் இடத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நேற்று முதல் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற் காக பள்ளியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டு, சமூக இடைவெளியுடன் நிற்கும் வகையில் வட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன. மேலும், முதியவர்கள், பெண்கள் அமர இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாவட்டத்தில் 49 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 6,700 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுதொடர்பாக அலுவலர்கள் கூறும்போது, “கரோனா சிகிச்சை மையம் உள்ள இடங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்கள், அரசு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடுகள் முழுமையாக தீர்ந்த பின்னர், தடுப்பூசி போடும் விவரங்கள் குறித்த அறிவிப்பு முதல் நாளே வெளியிடப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT