தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரூ.10 கோடிக்கு மேலான திட்டப்பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நுண் திட்டங்களை வகுத்துள்ளோம். 3-வது அலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரை நகருக்குள் வராமல் தடுத்து, கடலுக்கு அனுப்பும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 748 கிராமங்களுக்கான ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம், 93 கிராமங்களுக்கான ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் முடிவடைந்து சோதனை நடைபெறுகிறது. இரண்டு குடிநீர் திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள 53 குளங்களை முழுமையாக தூர்வாரும் திட்டம், திருச்செந்தூர் நகருக்குள் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையிலான திட்டம் போன்ற பல திட்டங்களை ஆலோசனை செய்துள்ளோம் என்றார்.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.