இந்தியாவில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,471 ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 60,471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 75 நாட்களில் மிகவும் குறைவான அளவாகும். தினசரி பாதிப்பு தொடர்ந்து 8-வது நாளாக 1 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 2.95 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.82 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.17 லட்சம் பேர் குணமடைந்தனர். தொடர்ந்து 33-வதுநாளாக, புதிதாக பாதிக்கப்படுவோரைவிட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,726 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.77 லட்சமாகஅதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9.13 லட்சமாக குறைந்துள்ளது. இது தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 3.3 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ