சிறு,குறு விசைத்தறிகளை இயக்கஅனுமதிக்க வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சங்க தலைவர் சி.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்வோர் அடிப்படையில் 2.5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அவற்றை நம்பிலட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கூலி கிடைக்காமல் வறுமையில் வாடும் இந்நேரத்தில், கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.
ஒரு விசைத்தறி கூடத்தில் இரண்டு அல்லது மூன்று தொழிலா ளர்கள் மட்டுமே அதிகபட்சமாக வேலை செய்வார்கள். இதில் சமூகஇடைவெளி எப்போதும் கடை பிடிக்கப்படும். வறுமையில் வாடும் சிறு, குறு விசைத்தறியாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் கணக்கில்கொண்டு கரோனா விதிகளை பின்பற்றி, சிறு, குறு விசைத்தறிகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.