நாமக்கல்: முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதி வாய்ந்த நபர்கள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமுதாய வளர்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியது.
இதன்படி கடந்த 2021-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டு தமிழ்நாட்டில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர். உள்ளூர் மக்களிடம் விருதுக்கு விண்ணப்பம் செய்பவரின் மதிப்பும் இவ்விருதிற்கு கணக்கில் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் இம்மாதம் 30-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.