தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே உள்ள சிந்துவம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (52). கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மாடுகளை குள்ளப்புரம் டாஸ்மாக் கடை அருகே மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குள்ளப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கோகுல் உள்ளிட்ட சிலர் இருசக்கர வாக னங்களில் வந்து கொண்டிருந்தனர். மாடுகளை ஓரமாக ஓட்டிச் செல்லுமாறு கூறியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ராமசாமி தாக்கப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த சிந்துவம்பட்டியைச் சேர்ந்த சிலர் குள்ளப்புரத்துக்குச் சென்று அங்குள்ளவர்களைத் தாக்கினர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
ஜெயமங்கலம் போலீஸார் குள்ளப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், முத்துமணி,கோகுல், விமல்ராஜ் சிந்துவம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி, கபிலன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
2 கிராமங்களிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.