வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் பயன்பாட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு 20 படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு விநியோகம் செய்ய முடியும். இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை வேலூர் ரோட்டரியுடன் இணைந்து வேலூர் மற்றும் காந்திநகர் வாசவி சங்கங்கள், கோவை ரோட்டரி சங்கம், சுகுணா சிக்கன் நிறுவனமும் இதற்கான நிதியை வழங்கி கட்டமைத்துள்ளனர்.
இந்நிலையில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நேற்று முன்தினம் மாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் பாண்டியன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோசப் அன்னையா மற்றும் திருமாறன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.