Regional01

கூடுதல் தளர்வுகள் இல்லாததால் - சேலம் மாவட்ட எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்துக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் இல்லாததால் மாவட்ட எல்லைகளில் மது கடத்தல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்றுப் பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தது. தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து, தொற்றுப் பரவல் அதிகமுள்ள சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள மாவட்டங்களுடன் தொடர்பு உள்ள சேலம் மாவட்ட எல்லைகளான தொப்பூர், தலைவாசல் கூட்டுரோடு, தம்மம்பட்டி உள்ளிட்ட இடங்களில், சேலம் மாவட்ட போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், முறையாக இ-பாஸ் பெற்றுள்ளனரான என்பதை உறுதி செய்த பின்னரே, மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

இதனிடையே, கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து சேலம் மாவட்டத்துக்குள் மது பாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் போலீஸார் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT