கடலூர் மாவட்ட காவல்துறை எஸ்பியாக பணியாற்றிய அபிநவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்டத்தின் புதிய எஸ்பியாக சி. சக்தி கணேசன் நியமிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில் இவர் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். கடலூரில் நேற்று இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை பணியை மக்கள் பாராட்டும் விதத்தில் சிறப்புடன் அமைய அனைத்து விதத்திலும் செயல்பாடு அமையும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். முதியோர், பெண்கள் உள்ளிட்டவர்களின் புகார்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு நேரடி விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் இருந்துநேரடியாக புகார்கள் பெறுவதற்கு தொலைபேசிஎண்கள் அறிவிக்கப்படும். புகார்கள் கொடுத்தவுடன் நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறை செயல்படும். நேரடி விசாரணை மேற்கொள்வதோடு புகார்கள் மீது உடனுக்குடன் காவல்துறை சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை கண்காணிக்க தனியாக சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணைக் குழு செயல்படும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை, குற்ற நிகழ்வுகள் தடுக்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிரதான சாலைகளில் இது முக்கியமாக இடம்பெறும். தற்போது மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள தனிக் குழு அமைக்கப்படும்” என்றார்.