Regional02

கந்து வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓசூர் சிறு, குறுந்தொழிற் சங்கத்தினர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு, குறுந்தொழிற் சாலைகள் சங்கத்தினர் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் அதிபர் பாலாஜி கந்துவட்டி கொடுமையால் கடந்த 12-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மனைவி பிருந்தா தனது 3 வயது குழந்தை மற்றும் ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன், முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுதொடர்பாக ஹோஸ்டியா தலைவர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் ஓசூரில் தொழில் நடத்துபவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். தற்போது, தொழில் அதிபர் பாலாஜி, வாங்கிய கடன் ரூ.30 லட்சத்துக்கு வட்டியுடன் ரூ.40 லட்சம் செலுத்தி உள்ளார். இருப்பினும் கந்துவட்டி கொடுமையால் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். ஓசூரில் கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல கொலை செய்யப்பட்ட பாலாஜியின் குடும்பத்துக்கு அரசு உதவிட வேண்டும். கணவரை இழந்து தவிக்கும் பிருந்தாவுக்கு நிதியுதவியும், படிப்புக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT