Regional02

நகை, பணம் திருடியதாக மகன் மீது விவசாயி சந்தேகம் : கிருஷ்ணகிரி போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை தனது மகன் அனுப்பிய மர்ம நபர்கள் திருடிச் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக விவசாயி புகார் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி அடுத்த தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ் (60). இவர் கால்நடைகள் வியா பாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது மகன் லோகேஷ்குமார் (32) ஓசூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோவிந்தராஜியின் 2-வது மகள் புவனேஸ்வரியின் (28) கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். எனவே, தாசரப்பள்ளியில் தன் தந்தையுடன் வசிக்கும் இவர் வீட்டின் அருகில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேத முகத்தில் கர்சீப் கட்டிய மர்மநபர்கள் கடைக்கு வந்து புவனேஸ்வரி மீது மயக்கப் பொடி தூவியுள்ளனர். இதில் அவர் மயக்கமடையவே மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 20.5 பவுன் நகை மற்றும் ரூ.16 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.

இதுதொடர்பாக கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘நான் அண்மையில் நிலம் ஒன்றை விற்று பணத்தை வீட்டில் வைத்திருந்தேன். என் வீட்டில் நான் எங்கே பணம் வைப்பேன் என்பது என் மகனுக்கு மட்டுமே தெரியும்.

எனவே, எங்கள் வீட்டில் பணம், நகையை திருடிச் சென்றவர்கள் என் மகன் லோகேஷ்குமாரால் அனுப்பப்பட்டவர்களாக இருக்கலாம் என சந் தேகம் உள்ளது’ என்று தெரிவித் துள்ளார். இதை யடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT