கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் முக்கிய பங்காற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக் கும் அரசின் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் மாநில மகளிர் மருத்துவ பிரிவு செயலாளர் வினோதினி வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அண்மையில் அனைத்து மருத்துவ நிலையத் தலைவர்களுக்கும் எழுதப்பட்ட கடிதத்தில் பிசியோதெரபி மருத்து வர்களை கரோனா சிகிச்சையில் சற்றும் தொடர்பில்லாதவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் கரோனா நோயாளிகளுக்கும், பிசியோ தெரபி மருத்துவத்துக்கும் தொடர்பு இல்லை என்ற நிலை உருவாகும். இது கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சையின் தற்போதைய நிலையை பாதிப்பதுடன் பேராபத்தை உண்டாக்கும். இந்த அறிவிப்பு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு மனவேதனையை அளிப்பதுடன், மருத்துவ சேவையில் தொய்வை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்துவிடும்.
கரோனா நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, சுவாசத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி, உடல் இயக்க சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவில் நுரையீரல் சளியை அகற்றும் நெஞ்சு பிசியோதெரபி சிகிச்சை போன்றவை அளிப்பதன் மூலம் நிமோனியாவால் ஏற்படும் சளியை வெளியேற்றி உடலில் ஆக்சிஜன் அளவை சீராக வைக்க பிசியோதெரபி மருத்துவர்கள் உதவுகிறார்கள். மேலும், கரோனாவுடன் வரும் காய்ச்சலால் ஏற்படும் உடல் அசதி மற்றும் உடல் வலிகளை போக்கி, மூட்டு இறுக்கங்களை தளர்த்தி முடங்கிய நோயாளிகளை எழுந்து நடக்கச் செய்கின்றனர்.
கரோனா நோயாளிகளுக்கு மிக அருகில் இருந்து அதிக நேரம் சிகிச்சை அளிப்பதால் பிசியோதெரபி மருத்துவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, பிசியோதெரபி மருத்துவர்களை கரோனா சிகிச்சையில் சற்றும் தொடர்பில்லாதவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பதை உடனே திரும்ப பெற வேண்டும்.
மேலும், கரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு திட்டம் சார்ந்த பிசியோதெரபி மருத்துவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.