பொது முடக்கத்திலும் தபால் சேவை மூலம் இந்தியா முழுவதும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பாதிப்பால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தினமும் பல பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் பேருந்துகள் மூலம் முகக்கவசம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. பொது முடக்கத்தின் காரணமாக இவை அனுப்புவதில் சிரமம் இருந்தது. ஆனால் தபால் சேவை தொடர்ந்து இயங்கி வருவதால் இதனை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம் மற்றும் துணை, கிளை தபால் நிலையங்களில் இருந்து தினமும் பல்வேறு மாநிலங்களுக்கு முகக்கவசம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களும் தங்கு தடையின்றி தபால் சேவையை பயன்படுத்த முன் வர வேண்டும்.