ராணுவ அமைச்சகத்தின் நிதி உதவி ரூ.97.40 லட்சம் செலவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரவநிலை ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டது.
விருதுநகரில் கரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராணுவ அமைச்சகத்தின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ரூ.97.40 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரவ நிலை ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், டீன் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.