கிருஷ்ணகிரியில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் உர விற்பனை நிலையங்களில் நேற்று வேளாண் இணை இயக்குநர் ராஜேந்தின் மற்றும் உதவி இயக்குநர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இணை இயக்குநர் கூறும்போது, நடப்பு கார் மற்றும் கரீப் பருவத்திற்கு தேவையான, ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், 4,676 டன் யூரியா, 2343 டன் டி.ஏ.பி., 1,278 டன் பொட்டாஷ், 6,761 டன் காம்பளக்ஸ், ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டி.ஏ.பி., உர மூட்டையின் அதிகபட்ச விலை, 1200 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்றால், சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும்.
ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே, உரம் விற்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் உரிய விற்பனை பட்டியலை, கேட்டுப் பெற வேண்டியது அவசியம்.
மேலும் சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் தகவல் பலகையில், உரங்களின் இருப்பு, விலை விவரம் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உரங்களின் இருப்பு பதிவேடு பராமரிப்பு, விற்ற உரங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்தால், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.