கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மருந்து இல்லாததால் கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனை அறியாத இளைஞர்கள், முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மருத்துவமனைகளுக்கு சென்று ஏமாற்றுத்துடன் திரும்பினர். இந்நிலையில், மாவட்டத்திற்கு நேற்று கரோனா தடுப்பூசிகள் வந்தன. நேற்று மாவட்டம் முழுவதுமுள்ள 61 இடங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.
காலை முதலே இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் , கல்லாவி, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 6,530 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. பல இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் குவிந்தனர். ஒவ்வொரு மையத்திற்கும் 100 முதல் 500 வரை மட்டுமே மருந்துகள் அனுப்பப்பட்ட நிலையில், டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.