மத்திய அரசின் சென்னை பத்திரிகைதகவல் அலுவலகம், கோவை மாவட்டகள விளம்பர பிரிவு அலுவலகம் ஆகியவை இணைந்து, ‘இரண்டாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மற்றும் வருங்கால பாதிப்பை தவிர்ப்பது எப்படி?’ என்பது குறித்த இணையவழி கருத்தரங்கை நேற்று நடத்தின. இதில், டாக்டர் நேமிநாதன் பேசியதாவது: கரோனா முதல் அலையில் 50 வயதுக்கு மேற்பட்டோரும், இரண்டாம் அலையில் 30 வயதுக்குமேற்பட்டோரும் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கணிக் கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
10 முதல் 20 சதவீத குழந்தை களுக்கு வயிற்றுப்போக்கு, வயிறு வலி, வாந்தி மட்டும் இருக்கும். சளி, இருமல் இருக்காது. ஆனால், கரோனா தொற்றாக இருக்கும். சிலருக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். உதட்டில் வெடிப்பு இருக்கும்.
பரிசோதனை அவசியம்
நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீம் பேர் 18 வயதுக்கு மேல் உள்ளனர். எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். முககவசம் அணிவது, சமூக இடைவெளி, சோப்பு போட்டு கைகளை கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, குழந்தைகள் ஓடி வந்து அவர்களை தொடுவார்கள். இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.