கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. தற்போது கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை வரும் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதனுடன் ரேஷன்கார்டுதாரர்களுக்கு கோதுமை, சர்க்கரை, ரவை உள்ளிட்ட 14 மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.
நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்குவதற்காக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கும் பணி சேலத்தில் நேற்று தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் 1,591 ரேஷன் கடைகளில் மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் மளிகைத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வசதியாக, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நாளொன்றுக்கு 200 கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.
முதல் தவணையை பெறாமல் விட்டவர்களுக்கு, 2-வது தவணையுடன் முதல் தவணைத் தொகையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு தொடர்ந்து நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.