திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே காந்திமதி அம்மன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் யோகா- தியான பயிற்சி கூடத்தை திறந்துவைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 3-ம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 438 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
கூடங்குளம் அரசு மருத்துவமனை, மானூர் வட்டம் சேதுராயன்புதூர், கங்கைகொண்டான் சிப்காட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.
கரோனா தொற்றின் 3-ம் அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்று, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்திமதி அம்மன் பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் பிரத்யேகமான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 415 படுக்கைகள் மற்றும் ஜீரோ டிலே வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டபத்தில் 100 படுக்கைகள், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 210 படுக்கைகள், அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகள் என்று, மொத்தம் 825 படுக்கைகள் மாநகர பகுதிகளில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
புறநகர் பகுதியில் தருவை எப்எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, பத்தமடை சிவானந்தா மருத்துவமனை, முக்கூடல் பீடித் தொழிலாளர்கள் மருத்துவமனை, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர் யூனிவர்சல் பொறியியல் கல்லூரி, திசையன்விளை புனித அந்தோனியார் கல்வியியல் கல்லூரி என்று, 6 இடங்களில் கரோனா சிகிச்சைக்காக 980 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் 2,711 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர் கள் என 13,19,234 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 1,54,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான தடுப்பூசிகளை வழங்காததால் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெறாமல் உள்ளது என்று தெரிவித்தார்.
சேதுராயன்புதூர், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப், திருநெல்வேலி ஆட்சியர் வே.விஷ்ணு, மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தல்
திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம். செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஒருவார காலத்தில் பதில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தனர். ஆனால், இன்னமும் பதில் தெரிவிக்கவில்லை. கரோனாவால் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழில், அதை குறிப்பிட்டு அளிப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஆதிச்சநல்லூரில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அகழாய்வு குறித்த விரிவான ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்றார்.