கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், மளிகைக் கடைகளின் நேரத்தை குறைத்து இயங்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கூறும்போது, எங்கள் அமைப்பின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மளிகைக்கடைகளும், காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.
ஏற்கெனவே அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வரும் நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் இந்த நடைமுறையை வியாபாரிகள் தாங்களாகவே அமலுக்கு கொண்டு வந்துள்ளனர் என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், ஈரோடு எஸ்.பி. சசி மோகனிடம் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.