கரோனா காலத்தையொட்டி மத்திய அரசின் உணவு தானியம் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 3,78,448 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. முதல் கட்ட நிவாரணத் தொகையான 2 ஆயிரம் ரூபாய் 99.66 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ. 2,000 ஜூன் 15-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக வரும் 11-ம் தேதியிலிருந்து வீடு வீடாக ரேஷன் கடைக்காரர்கள் டோக்கன் வழங்க உள்ளனர். அதனையடுத்து ஜூன் 15-ம் தேதி முதல் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படும்.
இந்நிலையில் குடும்ப அட்டைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், மத்திய அரசின் உணவு தானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரிசியையும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம் என வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 5,594 டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.