கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று சிறிய மதகின் வழியாக விநாடிக்கு 348 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. படம்: எஸ்.கே.ரமேஷ் 
Regional02

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 348 கனஅடி தண்ணீர் திறப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 348 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக, கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 560 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப் பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 470 கனஅடியும், நேற்று 348 கனஅடியும் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. மேலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு முதல் மற்றும் 2-ம் போக சாகுபடிக்கு விநாடிக்கு 240 மில்லியன் கனஅடி தண்ணீர் முன்னுரிமை அடிப்படையில் திறந்துவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து பாசன கால்வாய் வழியாக இணைப்பு ஏரிகளுக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

அதன்படி கடந்த 2 நாட்களாக அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளதால், நேற்று அணையில் இருந்து விநாடிக்கு 348 கனஅடி தண்ணீர் சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. பாரூர் ஏரி நிரம்பிய பிறகு, அணையில் இருந்து பாசன விவசாயிகளுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அலுவலர்கள் நேற்று தெரிவித்தனர். நேற்று அணையின் மொத்த கொள்ளளவான 52 அடி யில் 41.80 அடிக்கு தண்ணீர் இருந்தது.

SCROLL FOR NEXT