மாலதி 
Regional01

ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி ஆசிரியை நடத்தும் - ஆன்லைன் பயிற்சியால் 16 ஆயிரம் பேர் பயன் : இணையவழியில் நடந்த பாராட்டு விழா

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாலதி. சாரல் ஐசிடி ஆன்லைன் வகுப்பு நிறுவன தலைவரான இவர், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கான இலவச ஆன்லைன் பயிற்சியை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 150 நாட்களுக்கும் மேலாக ஐசிடி பயிற்சியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆர்வமூட்டல் பயிற்சி, ஆங்கிலத்தில் எளிமையாக பேசுவதற்கான பயிற்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 2020-2021ல் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு சாப்ட் டெவலப்மெண்ட் ஸ்கில் பயிற்சி மற்றும் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு மேற்படிப்புக்கான வழிகாட்டும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இணையதளம் வழியாக நடத்தி வருகிறார்.

போட்டித்தேர்வுக்கு பயிற்சி

இணையவழியில் 150-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை இவர் நடத்தியுள்ளார். இவருக்கு இணையவழியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் மாலதி வரவேற்று பேசினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், எஸ்எஸ் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், தென்காசி மாவட்ட எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், சாயல்குடி பள்ளி ஆசிரியர் பெர்ஜின் உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.

SCROLL FOR NEXT