திருப்பூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 492 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருப்பூர் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைதவிர்க்க வேண்டியும், பாதிப்பின் முக்கியத்துவத்தையும் போலீஸார் எடுத்துரைத்து வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த 24-ம் தேதி முதல் நேற்று வரை முகக் கவசம் அணியாதது தொடர்பாக 1,663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 5,492 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 600 அபராதம் விதித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சட்ட விரோத சாராய விற்பனை மற்றும் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்த3 பேரை கைது செய்து, 3 வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 25 லிட்டர் சாராய ஊறல்,13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்லடம் அருகே எலந்தகுட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. தளியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.