மகளிர் குழுக்கள் பெற்றுள்ள கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறையை மீறி செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் மகளிர் திட்டம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறன.
இம்மகளிர் குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளதால், அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக் கோரி, சிறு நுண்நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
கரோனா தொற்று பரவல் நெருக்கடியான கால கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடன் தவணை தொகை மற்றும் கடன் தொகையை வசூல் செய்யும் கடின போக்கை தவிர்க்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறை கள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.
இந்த வழிகாட்டு நெறிமுறையை மீறி செயல்படும் பட்சத்தில் தொடர்புடைய நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல், ஈரோடு
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் தவணை வசூல் தொடர்பாக புகார் இருந்தால் 94440 94133 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறையை மீறி செயல்படும் நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.