தொழிற்சாலைகளில் 50 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமாகா மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, ஈரோடு ஆட்சியர் சி.கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்து வகையான தொழிற்சாலைகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊதியம் இழந்துள்ளனர். பலர் வேலை வாய்ப்பை பறிகொடுத்துள்ளனர். இந்த நிலை மேலும் தொடருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் 10 சதவீதம் ஊழியர்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு எந்த வகையிலும் தொழிற்துறைக்கு பயனளிக்காது, குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் 10 சதவீத தொழிலாளர்களைப் பயன்படுத்தி, இயக்குவது எவ்வகையிலும் பயன் அளிக்காது.
எனவே, தொழிற்சாலைகளில் 50 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரி வோருக்கு சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.