Regional02

ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் - 65.14 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி வந்தது : பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவுவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களில் இருந்து 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

அந்த வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ஸ்டீல் ஆலையில் இருந்து 65.14 டன் திரவ ஆக்சிஜன் நேற்றுஇரவு 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' சிறப்பு ரயில் மூலம் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலில் 5 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. இந்த டேங்கர் லாரிகள் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 12.98 டன், தேனி மாவட்டத்துக்கு 8.12 டன், மதுரை கல்யாண் நிறுவனத்துக்கு 9 டன், ராம் கேசஸ் நிறுவனத்துக்கு 6.56 டன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 5 டன், சிவகங்கை மாவட்டத்துக்கு 7.34 டன், சிக்ஜில்சால் நிறுவன சேமிப்பு மையத்துக்கு 16.14 டன் என பிரித்து விநியோகம் செய்வதற்காக டேங்கர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT