வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமம் காந்தி நகர் கருணாநிதி சாலையில் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.50 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இங்கு மகளிர் விடுதி கட்டுவதற்காக கடந்த 2008 டிசம்பர் 22-ம் தேதி முதல் மாதம் ரூ.1 லட்சம் வாடகை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 29 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தம் செய்யப்பட்டு மகளிர் மேம்பாட்டு கழகத்தினரிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், வாடகை நிலுவை செலுத்தாதது மட்டுமின்றி, வெளிநபர்களின் வாகனங்களை நிறுத்திவைத்து, அதற்கும் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இந்த நிலத்துக்கு நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல், வருவாய் அலுவலர்கள் மூலம் சொத்து சுவாதீனமாக எடுக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
சென்னை சாலிகிராமத்தில் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த அந்த இடத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். வாகனம் நிறுத்த யாரும் அனுமதி வழங்கவில்லை. அறநிலையத் துறைக்கு அவர்கள் எந்த பணமும் கொடுக்கவில்லை.
தற்போது அந்த நிலம் மீட்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு 48 மணி நேர அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் வாகனங்களை அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். மீட்கப்பட்டுள்ள இடத்தில், மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும்.
இது முன்னோட்டம்தான்
கோயில் நிலத்தில் நீண்ட காலமாக இருக்கும் மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு அந்த நிலம் வாடகைக்கு விடப்படும். கோயில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.