பொதுமக்கள் வீட்டில் இருந்த வாறே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலமாக காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக பேசி புகார் அளிக்கும் திட்டம் கோவையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பொதுமக்கள், போலீஸாரின் நடவடிக்கை யில் திருப்தி இல்லாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் நேரில் புகார் அளிப்பது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் விதமாக, கோவை மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலமாக காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக உரையாடி புகார் அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “புகார்அளிக்க விரும்பும் பொதுமக்கள் 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவலை பதிவிட வேண்டும். இதையடுத்து, டோக்கன் முறையில் காவல் கண் காணிப்பாளரிடம் பேசுவதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும்.
நாள்தோறும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை புகார்தாரர்களிடம் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பேசி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். இணைய வசதி இல்லாத பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அளிக்கப்பட்டுள்ள எண்ணில் அலைபேசியில் அழைத்து பேசலாம்” என்றனர்.