சேலம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று இருப்பில் இருந்த 1,180 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் காலையிலேயே தீர்ந்து போனதால், அதன் பின்னர் தடுப்பூசி மையங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கோவிஷீல்டு தடுப்பூசியை , முதல் தவணை 3 லட்சத்து 34 ஆயிரத்து 35 பேரும், 2-வது தவணை 1 லட்சத்து 2 ஆயிரத்து 223 பேரும் செலுத்திக் கொண்டனர். கோவேக்சின் தடுப்பூசியை முதல் தவணை 56 ஆயிரத்து 242 பேரும், 2-வது தவணை 23 ஆயிரத்து 995 பேரும் செலுத்தியுள்ளனர். கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 16 ஆயிரத்து 495 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று காலை கோவேக்சின் தடுப்பூசி 1,060 டோஸ்களும், கோவிஷீல்டு 120 டோஸ்களும் இருப்பில் இருந்தன.
அதில், சேலம் மாநகராட்சியில் உள்ள 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒட்டு மொத்தமாக கோவேக்சின் தடுப்பூசி 130 டோஸ்கள் மட்டுமே இருப்பு இருந்தன.
கிச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவேக்சின் தடுப்பூசி இருப்பு முற்றிலும் இல்லை. இங்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் 10 டோஸ்கள் மட்டுமே இருப்பில் இருந்தன. மற்ற 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் ஒரு டோஸ் கூட இருப்பு இல்லை.
இந்நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நகராட்சி மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் நேற்று கரோனா தடுப்பூசி போட தடுப்பூசி மையங்களுக்கு வந்தனர்.
இருப்பு குறைவாக இருந்ததால், சிறிது நேரத்திலே தடுப்பூசிகள் தீர்ந்தன.இதனால், மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தடுப்பூசி செலுத்த வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.