கோவில்பட்டியில் அதிமுக சார்பில் சைக்கிள்கள் மூலம் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணியை அண்ணா பேருந்து நிலையம் அருகே கடம்பூர் ராஜு எம்எல்ஏதொடங்கி வைத்தார். பின்னர், அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சசிகலா கட்சியில் இல்லை. தேர்தல் நேரத்தில் கட்சிக்கு சாதகமாகவும் அவர் இல்லை. ஆட்சி பொறுப்பேற்ற 30 நாட்களில் ஒரு அரசை விமர்சிப்பது சரியான எதிர்க்கட்சிக்கு அடையாளமாக இருக்காது. திமுக அரசு பதவியேற்றதில் இருந்து கரோனா பரவல் அதிகமானதால், ஊரடங்கிலேயே தான் ஆட்சி நடக்கிறது. வழக்கமான பணிகள் ஏதும் இன்னும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்போம் என்று சொல்லியிருக் கின்றனர். எனவே, 100 நாட்கள் கழிந்த பிறகு அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, எதிர்க்கட்சியின் நிலைப்பாடு இருக்கும்.
பள்ளிக்கல்வித் துறை தரவரிசைப் பட்டியலில் ஏ அந்தஸ்தைப் பெற்று, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்கிற பெருமையை அடைந்திருக்கிறது. இதற்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பாக நடந்த அதிமுக ஆட்சி தான் காரணம்.
கரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்களும் இணைந்து பணியாற்றுவோம்” என்றார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.