காந்தி மார்க்கெட் செயல்படத் தொடங்கும்போது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்புடைய அனைத்து வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்று அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்படத் தொடங்கும்போது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.